ஜெனீவா தீர்மானத்தை சர்வதேச சமூகத்தின் தலையீடு என வர்ணிப்பது துரதிஸ்டவசமானது. பிரிட்டன்

0
276
ஜெனீவா தீர்மானத்தை சர்வதேச சமூகத்தின் தலையீடு என வர்ணிப்பது துரதிஸ்டவசமானது என பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அலுவலகத்தின் ஆசிய பசுவிக்கிற்கான அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கையின் ஆங்கிலநாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜெனீவா தீர்மானத்தை இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச தலையீடாக சித்தரிக்கும் சிலர் உள்ளனர் என பிரிட்டனின் அமைச்சர் தெரிவித்துள்ளார்

இது துரதிஸ்டவசமான நேர்மையற்ற நிலைப்பாடு என குறிப்பிட்டுள்ள மார்க் பீல்ட் இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் முக்கியமான கட்டமைப்பை வழங்கும் தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்குவது என்ற இலங்கை அரசாங்கத்தின் கொள்கை ரீதியிலான முடிவை பிரிட்டனும் இலங்கையின் ஏனைய நண்பர்;களும் அங்கீகரிக்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை அடுத்த மார்ச்சில் ஜெனீவா மதிப்பிடும் என தெரிவித்துள்ள அமைச்சர் இலங்கையில் நான் மிக தெளிவான திட்டங்களுடன் நல்லிணக்க முயற்சிகளை முன்னோக்கி நகர்த்துமாறு இலங்கை அரசாங்கத்தினை வலியுறுத்துவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சிகளிற்கான பிரிட்டனின் உறுதியான ஆதரவை வழங்குவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையை கண்டறிவது அடிப்படையான விடயம் என குறிப்பிட்டுள்ள மார்க் பீல்ட்  இலங்கை 2015 இல் வாக்களித்த பொறுப்புக்கூறும் மற்றும் உண்மையை கண்டறியும் பொறிமுறைகளில் முன்னேற்றத்தை வலியுறுத்துவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் உள்ள புலம்பெயர்ந்தவர்களும் ஏனையவர்களும் தொடர்ச்சியாக என்னிடம் கேள்வி எழுப்பும் விடயங்களில் ஒன்று பயங்கரவாத தடைச்சட்டம் எப்போது நீக்கப்படும் என்பதே எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பரந்துபட்ட பாதுகாப்பு சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் சர்வதேச தராதரத்திலான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவேண்டும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here