இலங்கை தமிழர் யார்   வரலாற்றுக்கு முந்திய காலம் .

0
541
இலங்கை தமிழர் யார்
வரலாற்றுக்கு முந்திய காலம் இலங்கையின் வடமேற்குக் கரையில் உள்ள பொம்பரிப்பில் கண்டுபிடிக்கப்பட்ட அடக்கத் தாழி. இது கிறித்துவுக்கு முன் ஐந்து தொடக்கம் 2 நூற்றாண்டுக் காலப் பகுதியைச் சேர்ந்தது. தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அடக்கத் தாழிகளை ஒத்தது.[13]இலங்கையில் வரலாற்றுக்கு முந்திய காலம் தொடர்பில் பல அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இலங்கையின், வடக்கு, வடமேற்கு, வடகிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகளும், தமிழ்நாட்டில் குறிப்பாகத் திருநெல்வேலிக் கரையோரம் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளும் ஒரே தன்மையானவையாகக் காணப்படுகின்றன. தமிழகத்தில் காணப்பட்ட பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய அடக்கக் களங்களை ஒத்த களங்கள் இலங்கையின் வடமேற்குக் கரையோரம் பொம்பரிப்பிலும், கிழக்குக் கரையோரம் கதிரவெளியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடக்ககாலப் பாண்டிய இராச்சியப் பகுதியில் காணப்படும் அடக்கக் களங்களோடு குறிப்பிடத் தக்க வகையில் ஒத்துள்ள இக்களங்கள் முறையே கிமு 5ஆம் நூற்றாண்டையும், கிபி 2 ஆம் நூற்றாண்டையும் சேர்ந்தவை. இவற்றோடு பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய அம்சங்கள் இலங்கையில் மன்னார், கந்தரோடை, ஆனைக்கோட்டை, வேலணை, காரைதீவு, புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பூநகரி, முல்லைத்தீவு, வவுனியா, மாமடு, பறங்கியாறு, அனுராதபுரம் ஆகிய இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் அரிக்கமேட்டில் காணப்பட்டதை ஒத்த கிமு 1300ஐச் சேர்ந்த மட்பாண்ட வரிசைகள் யாழ்மாவட்டத்தில் கந்தரோடையில் கண்டறியப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தில் தொல்லியலாளர் கா. இந்திரபாலாவின் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அகழ்வாராய்ச்சிக் குழுவினர் நடத்திய ஆய்வில் கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த மனிதன் ஒருவனுடைய புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. அக்குழியில் காணப்பட்ட முத்திரை ஒன்றில் இரண்டு வரியில் எழுத்துக்கள் காணப்பட்டன. ஒரு வரி தமிழ் பிராமியிலும், மற்றது சிந்துவெளிக் குறியீடுகளை ஒத்தும் அமைந்திருந்தன. இதை கோவேந்த, கோவேதன், கோவேதம்,[14] தீவுகோ[15][16] எனப் பல்வேறு வகையில் திராவிட மொழிச் சொல்லாக வாசித்துள்ளனர். இதை அடிப்படையாகக் கொண்டு இது ஒரு தலைவனுடைய புதைகுழியாக இருக்கலாம் என்கின்றனர்.

இலங்கையின் ஆனைக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்கால முத்திரைவேலணை சாட்டிப் பிரதேசத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் பிரிவினால் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்களும் மனித எலும்புகளும் சாட்டியை அண்டிய பிரதேசத்தில் முதற் சங்ககாலம் தொட்டு நாகரீகமடைந்த மக்கள் வாழ்ந்தாக அறியமுடிகின்றது[மேற்கோள் தேவை].

இவற்றை அடிப்படையாகக் கொண்டு, அக்காலத்தில் இலங்கையில் வாழ்ந்த மக்கள் தென்னிந்தியாவில் வாழ்ந்த திராவிட மொழி பேசிய மக்களின் இனத்தவரே என்னும் கருத்தைச் சில ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.[17] வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் பரவி வாழ்ந்த இடைக் கற்கால மக்களின் வழித் தோன்றல்களே இன்றைய இலங்கைத் தமிழரும், சிங்களவரும் என்பதும், தமிழ் பேசுவோரோ அல்லது பிராகிருத மொழி பேசுவோரோ பெருமளவில் இலங்கையில் குடியேறி அங்கிருந்த மக்களை அகற்றவில்லை என்பதும் இந்திரபாலாவின் கருத்து.[18] கிறித்தவ ஆண்டுக்கணக்கின் தொடக்கத்தை அண்டிய காலப் பகுதியில், தமிழ்நாடு, கேரளம், ஆந்திர, கர்நாடக மாநிலங்களின் தெற்குப் பகுதிகள், இலங்கை என்பன ஒரே பண்பாட்டு வலயமாக இருந்தன என்றும், தமிழும், பிராகிருதமும் மக்களின் இடப் பெயர்வினால் அன்றிப் பண்பாட்டுப் பரவலினாலேயே இலங்கைக்கு வந்தன என்றும் அவர் கூறுகிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here